செவ்வாய், 1 ஜூன், 2010

முஸ்லிம்களை வெளியேறுமாறு ,10 முஸ்லிம் குடும்பங்களும், சுமார் 50 முஸ்லிம் தனிநபர்களும் கடந்த 30ஆம் திகதி முல்லைத்தீவிற்கு சென்றிருந்ததாகவும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்காக சென்ற முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு அந்த மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இராணுவத்தினர் மூலம் உத்தரவிட்டிருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

முல்லைத்தீவிலிருந்து கடந்த 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டிருந்த மேற்படி முஸ்லிம்கள், நாட்டில் தற்போது சமாதானமான சூழ்நிலை உருவாகியதை அடுத்து தமது சொந்த இடமான முல்லைத்தீவிற்கு திரும்பிச்சென்றிருந்த நிலையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேறுவதற்காகவும்,  தமது சொந்த இடங்களை பார்வையிடுவதற்காகவும், தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாகவும் 10 முஸ்லிம்  குடும்பங்களும், சுமார் 50 முஸ்லிம் தனிநபர்களும் கடந்த 30ஆம் திகதி முல்லைத்தீவிற்கு  சென்றிருந்ததாகவும் ஹுனைஸ் பாரூக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், இவ்வாறு சென்ற முஸ்லிம்களை வெளியேறுமாறு உத்தரவிட்டமை தொடர்பில் தான் இமெல்டா சுகுமாரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் சரியான முறையில் பதிலளிக்கத் தவறியிருப்பதாகவும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவிடம் முறைப்பாடு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பிராந்திய ஆணையாளர் மற்றும் தான் உட்பட்டதான குழுவொன்று நாளை  முல்லைத்தீவிற்கு சென்று அம்மாவட்ட அரசாங்க அதிபரை சந்திக்கவிருப்பதாவும் கூறினார்.

இது இவ்வாறிருக்க, தமிழ்மிரர் இணையதளம் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரை தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக