வெள்ளி, 4 ஜூன், 2010
மத போதகர்கள் கைது ,ஆண் குழந்தை ரூ.1 லட்சம்-பெண் குழந்தை ரூ.20,000: கடத்தல் கும்பலிடம்
சென்னை: சமீபத்தில் பிடிபட்ட குழந்தை கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளிகளான கிரிஜா, லலிதா மற்றும் 7 பேரிடம் இருந்து 9 குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர்.
இந்தக் கும்பல் ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கும், பெண் குழந்தைகளை ரூ. 20,000க்கும் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஒசூர் விசாரணையில் கிடைத்த துப்பு...
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சிகிச்சை பெறுவதற்காக பஸ்சில் வந்த ராமாத்தாள் என்பவரின் 3 மாத குழந்தையை, உடன் பயணித்த ஒரு பெண் கடத்திச் சென்றார்.
இது குறித்து கிருஷ்ணகிரி போலீசார் விசாரணை நடத்தி அதே ஊரைச் சேர்ந்த தனலெட்சுமி, சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிவா, அவரது மனைவி கிரிஜா, இவர்களது கூட்டாளி ராணி ஆகியோரை கைது செய்தனர்.
சிக்கிய மதபோதகர்கள்...
இவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சென்னை படப்பையைச் சேர்ந்த அல்போன்ஸ் சேவியர் (48), திண்டிவனத்தைச் சேர்ந்த செல்வம் (44) ஆகிய மத போதகர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து ராமாத்தாளின் 3 மாத கைக்குழந்தையும் மற்றும் 3 வயது ஆண் குழந்தையும் மீட்கப்பட்டது.
முக்கிய புள்ளி கிரிஜா...
கைது செய்யப்பட்ட அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் கிரிஜா தான் முக்கிய புள்ளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தங்கள் காவலில் எடுத்த போலீசார் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
மனித உரிமை அமைப்பு லலிதா...
அப்போது கிரிஜா கொடுத்த தகவலின்பேரில் புதுச்சேரி மாநிலம் முத்தையால்பேட்டையைச் சேர்ந்த லலிதா என்ற பெண்ணும் நேற்று முன்தினம் பிடிபட்டார். இவர் தனது குழந்தை கடத்தல் தொழிலை மூடிமறைக்க அகில இந்திய மனித உரிமைகள் அமைப்பின் மகளிர் அணி தலைவியாகவும் இருந்து வந்துள்ளார்.
இந்தக் கும்பல் இதுவரை மொத்தம் 9 குழந்தைகளை கிருஷ்ணகிரி மற்றும் காவேரிபட்டிணம் பகுதிகளில் இருந்து கடத்தி சென்னை, புதுச்சேரி, பண்ருட்டி, செஞ்சியில் விற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ரூ. 20,000 முதல் ரூ. 1 லட்சம் வரை விலை...
சென்னை பெரம்பூரில் 2 குழந்தைகளையும், புதுச்சேரியில் 3 குழந்தைகளையும், பண்ருட்டியில் 2 குழந்தைகளையும், செஞ்சியில் ஒரு குழந்தையையும் விற்றுள்ளனர்.
இதில் 6 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் அடக்கம்.
ஆண் குழந்தைகளை ரூ. 1 லட்சத்துக்கும், பெண் குழந்தைகளை ரூ. 20,000 முதல் ரூ.80,000க்கும் விற்பனை செய்துள்ளனர்.
இந்தக் கும்பலிடமிருந்து 9 குழந்தைகளும் மீட்கப்பட்டுவிட்டன.
இதற்கிடையே கிரிஜாவின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவர் கிருஷ்ணகிரி நீதிமன்றதில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவுள்ளார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பஸ் ஸ்டாப்கள், பஸ் ஸ்டாண்டுகளில் குழந்தைகளை வைத்து பஸ்சுக்காக காத்து நிற்கும் பெண்களுக்கு உதவுவது போல நடித்து தான் இந்தக் கும்பல் குழந்தைகளை கடத்தியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னணியில் பெரும் கும்பல்?...
இந்தக் குழந்தை கடத்தல் பின்னணியில் மேலும் பெரிய கும்பல் இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து அடுத்ததாக கிருஷ்ணகிரி தனலெட்சுமியையும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக