செவ்வாய், 1 ஜூன், 2010

இந்தியா டுடேவின் கவலை. ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி

சாதி வாரிக் கணக்கெடுப்பின் அவசியம், அவசியமின்மையை வலியுறுத்தி குறிப்பிடும்படியான விவாதங்கள் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. அதற்குள் முந்திக்கொண்டு ‘ஜாதிப்பேய்’ என இந்தக் கணக்கெடுப்பை வர்ணித்து கவர் ஸ்டோரி வெளியிடுகிறது இந்தியா டுடே. ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெற்றால் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முழுவதுமாக அமுலுக்கு வந்துவிடும்’ என்பது இந்தியா டுடேவின் கவலை. இந்த ஒரு காரணத்தினாலேயே நாம் இந்தக் கணக்கெடுப்பை முதல் ஆளாக ஆதரிக்க வேண்டியிருக்கிறது. சாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது ‘எந்த சாதி பெரிய சாதி’ என எண்ணிப் பார்க்கும் வேலை இல்லை. நம் சமூகத்தில் அனைத்து வகையான அடக்குமுறைகளும் சாதியின் பெயரால்தான் நடக்கின்றன எனில் அதற்கான தீர்வுகளும் அதே ரீதியில்தானே இருக்க முடியும்?

வேலை வாய்ப்பிலும், கல்வியிலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முழுமையாக அமுல்படுத்தத் தடையாக இருப்பதே சாதி வாரியான கணக்கெடுப்பில் முழுமை இல்லை என்பதுதான். கடைசியாக 1931-ல் எடுக்கப்பட்டதுதான் சாதிவாரிக் கணக்கு. 80 வருடங்களுக்கு முந்தைய கணக்கு இப்போது செல்லுபடியாகாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கிறது. தவிரவும் மண்டல் கமிஷனில் சொல்லப்பட்டிருப்பது போன்று ‘இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் முன்னேறிய சாதிகளை பட்டியலில் மாற்றம் செய்ய வேண்டும்’ என்பதை செய்வதற்கும் இந்த கணக்கெடுப்பு அவசியமாகிறது.

அதேநேரம் கணக்கெடுப்பின் இறுதியில் சிறு குழுக்களாக இருக்கும் சிறிய சாதியினர் மேலும் ஒடுக்கப்படுவதற்கான அபாயங்கள் இருப்பதாகவும், ஆகப்பெரிய சாதி எது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அதன் ஆதிக்கம் மேலும் கூடுதலாவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவை அனைத்தையுமே நாம் பேச வேண்டும். இடஒதுக்கீடு என்பது சாதி ஆதிக்கத்தை ஒழிப்பதற்கான ஏற்பாடுகளில் ஒன்றா? ஆம் என்றால் இத்தனை வருட இட ஒதுக்கீட்டால் சாதியின் பாத்திரம் சமூகத்தில் எந்த அளவுக்குக் குறைந்திருக்கிறது, இனிமேற்கொண்டும் தொடரப்போகும் இட ஒதுக்கீட்டின் வடிவம் மற்றும் உள்ளடக்கத்தில் மாற்றம் தேவையா என அனைத்தையும் நாம் பேசுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக