சென்னை: கொழும்பு நகரில் ஜூன் 3ம் தேதி தொடங்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நடத்தக் கூடாது. அதில் இந்திய நடிகர்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி இன்று சென்னையில் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
ஜூன் மாதம் 3 முதல் 5ஆம் தேதிவரை இந்த விழா நடைபெறுகிறது. இதில் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மும்பையில் உள்ள அமிதாப் பச்சன் வீட்டு முன்பு தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து தான் தமிழ் அமைப்புகளின் உணர்வுகளை மதிப்பதாகவும், இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கின்றது.
சென்னை மெமோரியல் ஹால் முன்னால் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் திரைப்படக் கலைஞர்களும்,தமிழ் இன உணர்வாளர்களும் கலந்துகொள்கின்றனர்.
இது குறித்து தமிழர்களைக் காப்போம் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை போர் குற்றம் செய்துள்ளது என்றும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்துள்ளது என்றும் குற்றம் சாற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வணிகத் தடைகளை விதித்துள்ளது.
இந்நிலையில், அந்த நாட்டிற்கு பெருமை சேர்க்கும் உள் நோக்கத்துடன் இந்திய சர்வதேச திரைப்படக் கழகம் அங்கு தனது விருது வழங்கு விழாவை நடத்த முன்வந்துள்ளது .
இப்படிப்பட்ட ஒரு விழாவை கொழும்புவில் நடத்த முன்வந்திருப்பதன் மூலம் அதன் மீதான போர்க் குற்றம், இனப்படுகொலைக் குற்றம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள சிங்கள அரசைக் காப்பாற்ற இந்த திரைப்படக் கழகம் முன்வந்துள்ளது.
எனவே, இந்த விருது வழங்கு விழாவை கொழும்புவிலிருந்து வேறு நகருக்கு மாற்ற வேண்டும், சிறிலங்காவின் போர்க் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிராக அது இழைத்துள்ள குற்றங்களையும் மறைக்க உதவும் எந்த ஆதரவையும் அதற்கு அளிக்கக்கூடாது, தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றம் இழைத்த சிறிலங்காவை இந்தியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.
ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் தாமரை, இயக்குனர் மணிவண்ணன், இயக்குனர் கெளதமன், இயக்குனர் ராம், இயக்குனர் வெற்றிமாறன், தோழர் தியாகு, தோழர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் அறிவரசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக