கொலை மற்றும் கப்பம்கோரல் போன்ற குற்றச்சாட்டுக்களின்பேரில் தேடப்பட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினர் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று அங்கு அவர்கள் அரசியல் புகலிடம் கோரிவருவதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிய குடுலால், ராஜாப்தீன், பஹ்யா, திகா பைஸர் ஆகியோர் இவ்வாறு வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோருவதாக தெரிவிக்கும் பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள், இவர்களில் பிரதியமைச்சர் ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தவர் என்று நன்கறியப்பட்ட குடுலால் என்பவர் இலங்கையில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகக் கூறி பிரிட்டனில் அரசியல் புகலிடம் கோரியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் இக்குற்றவாளிகள் தற்போது இந்தியா, பிரிட்டன், டுபாய் போன்ற நாடுகளில் தங்கியிருப்பதாகவும், இவர்களைக் கைதுசெய்வதில் சிரமம் காணப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தம் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் பாதாள உலகக் கோஷ்டியினரின் செயற்பாட்டை முடக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எனினும், நாட்டைவிட்டு சென்ற குற்றவாளிகள் சிலர் பொய்யான தகவல்களை வழங்கி அரசியல் புகலிடம் கோரியிருப்பதாகவும் பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக