ஞாயிறு, 30 மே, 2010

பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது

டெல்லி: போதிய ஓட்டுக்களைப் பெறாத பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று கேட்டு தலைமைத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் கமிஷனில் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்படி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்ற கட்சிகள் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் மக்களவை, சட்டசபை தேர்தல்களில் குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் பெற வேண்டும் அல்லது குறிப்பிட்ட அளவுக்கு இடங்களில் வெல்ல வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் அந்த அனைத்து மாநிலங்களிலும் போதிய அளவுக்கு வாக்குகள் பெற வேண்டும்.

இந் நிலையில், கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் முதல் ஓராண்டில் நடந்த பல்வேறு தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், மிகக் குறைவான ஓட்டுக்களைப் பெற்ற, அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பாமக, மதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, அருணாசல காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு 3 வாரங்களுக்குள் இந்த கட்சிகள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மதிமுகவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மட்டுமே மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது. எனினும், தேர்தலில் அதனுடைய செயல்பாடுகள் திருப்தியாக இல்லாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பாமகவைப் பொறுத்தவரை புதுச்சேரியில் அந்தக் கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில் அந்த கட்சி போதுமான வாக்குகளைப் பெறாததால் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பிகாரில் ஆளும் கட்சியாக உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஜார்கண்ட்டில் போதிய வாக்குகள் கிடைக்காததாலும், உத்தரப் பிரதேசத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் சமாஜ்வாடி கட்சிக்கு மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் போதுமான வாக்குகள் கிடைக்காததாலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மேகாலயா மாநிலத்தில் போதுமான வெற்றி கிடைக்காததாலும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஒரிஸ்ஸாவில் போதுமான இடங்கள் கிடைக்காததாலும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக