முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சிலருக்கு திருமணம் செய்துவைக்க திட்டமிடுவதாக அவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பாக இருக்கும் இராணுவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் சுமார் 20 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க பி.பி.சி.க்கு தெரிவித்திருக்கிறார். அவர்களுடைய உறவுகள் யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே ஏற்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் வாய் மூல உறுதிமொழி மூலம் திருமணம் செய்திருந்ததாகவும் ஆனால், உத்தியோகபூர்வமாக திருமணம் செய்திருக்கவில்லையெனவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் அநேகமானோர் தமது ஜோடிகளை திருமணம் செய்ய விரும்புவதாகவும் ஆயினும் இருதரப்பினரதும் பெற்றோர்களினதும் இணக்கத்தை அதிகாரிகள் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஆயினும், சில ஜோடிகளின் நிலைமை மாற்றமடைந்திருக்கலாமெனவும் பெண்ணொருவர் இனிமேலும் அந்த மனிதரை நான் விரும்பவில்லையெனக் கூறக்கூடுமெனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், ஆண்களும் அவ்வாறு கூறக்கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் முடிவில் சுமார் 10 ஆயிரம் முன்னாள் போராளிகள் முகாம்கள் அல்லது புனர்வாழ்வு நிலையங்களில் வைக்கப்பட்டனர். ஜோடிகள் பிரித்து வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் கிழமைக்கு ஒருதடவை ஒருவரையொருவர் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக பிரிகேடியர் ரணசிங்க கூறியுள்ளார். அவர்கள் சட்டரீதியாகத் திருமணம் செய்த பின் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து குடும்பங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்குச் செல்ல முடியும். அவர்களில் சிலருக்குப் பிள்ளைகள் உள்ளனர். சிறியளவு தொகையினரே தற்போது வழக்கு விசாரணைக்காக வைக்கப்படுவார்களெனவும் அநேகமானோர் ஒருவருடத்தின் பின் விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
____________________________________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக