செவ்வாய், 13 ஏப்ரல், 2010

சட்ட மேலவையை அமைக்கும் தீர்மானம


சென்னை: சட்ட மேலவையை அமைக்கும் தீர்மானம் இன்று சட்டசபையில் 3ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்களின் ஆதரவுடன் நிறைவேறியது.

இந்தத் தீர்மானத்தை ஆதரித்து திமுக, காங்கிரஸ், பாமக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துவிட்டனர். வாக்கெடுப்பில் தேமுதிகவின் ஒரே எம்எல்ஏவான விஜய்காந்த் கலந்து கொள்ளவில்லை.

அதே போல தீர்மானத்தை எதிராக அதிமுக வாக்களித்த நிலையில் அக் கட்சியின் பொதுச் செயலாள்ர் ஜெயலலிதா சட்டசபைக்கு வரவில்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏவான கோபாலனும் இன்று சட்டசபைக்கு வரவில்லை

இதனால் 155 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. தீர்மானத்துக்கு எதிராக 61 வாக்குகள் விழுந்தன.

வாக்களிக்காத அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள்:

அதேபோல திமுக பொதுக்குழுவில் கலந்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரனும், ராதாகிருஷ்ணனும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதேபோல, உச்சநீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதிமுகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. சந்திராவும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

முன்னதாக இது தொடர்பாக தனி தீர்மானம் கொண்டு வருவதற்காக அனுமதியைக் கோரி அமைச்சர் அன்பழகன் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதையடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் மேலவை அமைக்கும் தீர்மானத்தை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். அதில்,

தமிழ்நாடு மாநிலத்தில் சட்டமன்ற மேலவையை தோற்றுவிக்கலாம் என்றும், அதற்குரிய சட்டத்தினை, அந்த சட்டத்தில் வகை முறைகளுக்கு, செயல் விளைவு அளிக்க தேவைப்படுகிற அரசு அமைப்பின் திருத்தத்துக்கான வகை முறைகளையும் மற்றும் நாடாளுமன்றம் தேவை என கருதலாகும் நிறைவுரு, இடைவுரு, மற்றும் விளைவுரு வகை முறைகளையும் உள்ளடக்கிய வகையில் இந்திய அரசமைப்பின் 169ம் உறுப்பின் (1ம்) கூறின் கீழ் நிறைவேற்றலாம் என்று இந்த பேரவை தீர்மானிக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் மேலவை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து மேலவை தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து நடந்த விவாதத்தில் காங்கிரஸ், பா.ம.க, விடுதலை சிறுத்தைகள் ஆகிய 3 கட்சிகளும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசின. அதிமுக, மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகளும் எதிர்த்து பேசின.

இதையடுத்து இந்தத் தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது.

ஓட்டெடுப்புக்காக அவையில் மணி அடித்ததும் அனைத்து வாயில்களும் மூடப்பட்டன. அவைக்கு வந்திருந்த எம்.எல்.ஏக்கள் ஒவ்வொருவரது பெயரையும் சட்டமன்ற செயலாளர் செல்வராஜ் பெயர் சொல்லி அழைத்தார். அப்போது ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்தவர்களது ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 161 பேர் ஆதரித்து வாக்களித்தனர்.

அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏக்கள் 61 பேர் எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து ஓட்டெடுப்பு முடிவை சபாநாயகர் அறிவித்தார். அவர் கூறுகையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அவைக்கு வந்திருந்த உறுப்பினர்களில் 3ல் 2 பகுதியினர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எனவே மேலவை அமைப்பதற்கான தனித் தீர்மானம் நிறைவேறியது என்று சபாநாயகர் அறிவி்த்தார்.

இதை திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். ஓட்டெடுப்பு முடிந்த பின் அவைக் கதவுகள் திறக்கப்பட்டன.

தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து சட்டமேலவை, புதிய சட்டமன்ற வளாகத்திலேயே இயங்கும் என்று முதல்வர் அறிவித்தார்.

கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், 1986ம் ஆண்டு மேலவை கலைக்கப்பட்டது. அதன் பின்னர் திமுக ஆட்சியில் இரு முறை மீண்டும் மேலவையை கொண்டு வர சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் அனுமதிக்கும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன.

ஆனால் அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக தீர்மானத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றியது.

இந் நிலையில் தற்போது மீண்டும் மேலவையை உருவாக்க திமுக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. கடந்த புதன்கிழமை சட்டசபையில் பேசிய திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன், மீண்டும் சட்ட மேலவையை கொண்டு வர கோரிக்கை விடுத்துப் பேசினார். இதை முதல்வரும் ஏற்று, தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

முதல்வரின் இந்த அறிவிப்புக்கு அதிமுக, மதிமுக, இடதுசாரிகள் ஆகியவை எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் முழு ஆதரவு தெரிவித்தது.

இந் நிலையில், மேலவை அமைப்பது தொடர்பான தீர்மானம் இன்று சட்டசபையில் கொண்டு வரப்பட்டது.

முதல்வர் கருணாநிதி மேலவையை மீண்டும் அமைக்க வலியுறுத்தும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்போது எழுந்த சிபிஐ தலைவர் சிவபுண்ணியம், இந்த்த் தீர்மானத்தை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக கூறி வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

இதையடுத்து சிபிஐ உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வெளியேறினர்.

தீர்மானம் ஓட்டெடுப்புக்கு விடப்பட்டபோது திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 161 பேர் ஆதரித்து வாக்களித்தனர்.

3ல் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்தத் தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக