திங்கள், 12 ஏப்ரல், 2010

புலிகளது’ நடவடிக்கைகளைக் கூறி வெளிநாடுகளில் வயிறு வளர்த்தவர்களே இப்புதிய சித்தாந்தத்தையும்

1983ம் ஆண்டின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளையடுத்தே வடபகுதியிலிருந்து புலம்பெயர்ந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
- எம். மகாதேவன

இலங்கை ஓர் அமைதி நிறைந்த நாடாக உருமாற்றம் பெறுவதை சில வெளிநாட்டுச் சக்திகள் மட்டுமல்ல உள்நாட்டு விஷமிகளும் விரும்பாதவர்களாகவே இருக்கின்றனர். எரிகின்ற வீட்டில் பிடுங்குவது லாபம் என இலங்கையில் கொளுந்துவிட்டெரிந்த உள்நாட்டுப் போரில் குளிர் காய்ந்தவர்கள் ஏராளம். எனவே இத்தகைய ‘பொல்லாத்தனமான’ சக்திகள் குறித்து புலம்பெயர்ந்தவர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். இலங்கையில் அமைதி திரும்புவதையும், இனங்களுக்கிடையே சமாதான சகவாழ்வு மீளவும் வளருவதையும் விரும்பாத சக்திகளே வெளிநாடுகளில் மக்கள் பேரவை, மக்கள் புலிகள் கட்சி, நாடுகடந்த அரசு என்ற புதிய ‘சித்தாந்தத்தை’ ஆரம்பித்துள்ளனர்.

இதுவரை காலமும் ‘தமிbழ விடுதலைப் புலிகளது’ நடவடிக்கைகளைக் கூறி வெளிநாடுகளில் வயிறு வளர்த்தவர்களே இப்புதிய சித்தாந்தத்தையும் உருவாக்கியுள்ளார்கள்.

இதன்மூலம் தமது நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதோடு, இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு அடிவருடிகளாக இருப்பதே இந்த விஷமக்காரக் கும்பலின் குறிக்கோளாகவும் இருக்கின்றது.

எனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள சமாதான சக வாழ்வுக்கான காத்திரமான சூழலைக் குழப்பி மீளவும் அவல நிலைக்கு தமது மக்களைக் கொண்டு செல்ல, நன்கு சிந்திக்கத் தெரிந்த எந்தவொரு புலம்பெயர்ந்த தமிழ் மகனும் முன்வரமாட்டான் என்பது திண்ணம்.

இந்நிலையில் தாமும் வாழ்ந்து தாம் சார்ந்தோரையும் நிம்மதியாக வாழவைக்க வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்தோடு புலம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த பந்தங்கள் பற்றிய எதிர்காலத் திட்டங்களை வகுக்க வேண்டும். அதேசமயம் தீய விஷமச் சக்திகளின் மாய வலைக்குள் கடந்த காலங்களில் போன்று சிக்கிக் கொள்ளாதிருக்க வேண்டியதன் அவசியத்தையும் புலம்பெயர்ந்தோர் புரிந்துகொள்ள வேண்டியவர்களாகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக