வியாழன், 1 ஏப்ரல், 2010

திமுக தலைவர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன் - அழகிரி

சென்னை: திமுக [^] தலைவர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன் என்று மத்திய அமைச்சரும், முதல்வர் கருணாநிதியின் மகனும், திமுக தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதால் பரபரப்பு கூடியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முன்பு வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு அழகிரி அளித்த பேட்டியில், கருணாநிதியைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

இதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த இன்னொரு பேட்டியில் தலைவர் பதவிக்கு யார் வருவது என்பதை தனி நபர் யாரும் முடிவு செய்ய முடியாது. எனக்கே கூட அந்த அதிகாரம் கிடையாது என்று கூறியிருந்தார்.

இநத நிலையில் இன்று காலை அழகிரி சென்னை திரும்பினார். பின்னர் நேராக கோபாலபுரம் சென்ற அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார்.

அதன் பின்னர் அவர் மதுரைக்குக் கிளம்பினார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்கள் தலைவர் பதவி குறித்து கேள்விகள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த அழகிரி, தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தால் நிச்சயம் நான் போட்டியிடுவேன். ஜனநாயக முறைப்படி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன்.

ஜனநாயக முறைபபடி தேர்ந்தெடுக்கப்படும் தலைவரைத்தான் நான் ஏற்றுக் கொள்வேன். எனது மனசாட்சிக்குத் தோன்றுவதைத்தான் நான் பேசினேன். தலைவர் பதவிக்குப் போட்டியிட எனக்கு உரிமை உள்ளது. அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார் அழகிரி.

மு.க.ஸ்டாலின் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், தலைவர் இப்போது இருக்கும்போது மற்றவை குறித்து இப்போது எதற்குப் பேச வேண்டும் என்று கோபமாக கேட்டார் அழகிரி.

தலைவர் பதவிக்கு நிச்சயம் போட்டியிடுவேன் என்று அழகிரி கூறியிருப்பது திமுக வட்டாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக