திங்கள், 29 மார்ச், 2010

இந்த நிம்மதியைக் கெடுக்காமல் விட்டால் போதும்.

பொதுதேர்தலில் யாழ் .மக்களின் உணர்வலைகள்.28.03.10
தேர்தல் வந்திருக்கிறது ஒரு வகையில் சந்தோஷம் தான். எங்களுக்கு விரும்பியவர்களுக்கு இந்தத் தடவை நாங்கள் வாக்களிக்கலாம். கனகாலத்துக்குப்பிறகு இந்த முறைதான் இப்படி ஒரு தேர்தலில் வாக்களிக்கப் போகிறோம்.
சனங்கள் எல்லாம் வாக்களிக்க வேணும். அப்பதான் எங்கட சமூகம் வளர்ந்திருக்கிறது என்று தெரியும்.
நாங்கள் எங்கட உரிமையை விடக்கூடாது.  எங்களுக்கு வருகிற சந்தர்ப்பங்களை நாங்கள் எதற்காக இழக்க வேணும்? நாங்கள் வாக்குப் போடா விட்டால் போடாமல் விட்டவர்களுக்கு சிறப்பாக எதுவும் கிடைக்கப் போறதில்லை. நாங்கள் வாக்களித்தால்தான் எங்களுக்குப் பொருத்தமான தலைமைகளை தெரிவு செய்யலாம். வாக்களிக்காமல் விட்டால் எங்களுக்குப் பொருத்தமில்லாத தலைமைகள் சில வேளை வந்தாலும் வரக்கூடும். அப்படி வந்தால் பிறகு என்னதான் செய்ய முடியும்? ஆகவே, கட்டாயம் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று விரும்பகிறேன் என்றார்  ஒரு பெண் (விபரம் குறிப்பிட விருப்பவில்லை)
சுப்பிரமணியம் (பருத்தித்துறை)
ஓய்வுபெற்ற மின்சார சபை உத்தியோகத்தர் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் இருக்கின்ற நிலைமையில் இப்ப இந்தத் தேர்தல் தேவையில்லை. முதலில் எங்களுக்கு ஒரு நல்ல நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தித் தரவேண்டும். அதற்குப் பிறகுதான் தேர்தலை அரசாங்கம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் அடுத்தடுத்து தேர்தலை வைத்து எங்களை ஏமாற்றப் பார்க்கிறது.
இந்தத் தேர்தலை நாங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அது எங்களுக்கு எந்த நன்மையையும் தராமல்தான் இருக்கப்போகிறது. ஆனால், என்னைப் போல பலருக்கும் தேர்தலில் வாக்களிக்க விருப்பமில்லை. அப்படி வாக்களித்தாலும் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியவில்லை.  இப்படி ஒரு நிலைமையை நான் என் வாழ்நாளில் காணவேயில்லை என்றார்.
வே. சுப்பிரமணியம் (அராலி கிழக்கு) கருத்துக் கூறுகையில்,

தமிழர்களுக்கு என்று இனி ஒரு தலைமை வந்தால்தான் நாங்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். இப்போது எங்களுக்கு யார் ஒரு நல்ல தலைமை இருக்கிறதென்று சொல்லுங்கள் பார்க்கலாம். ஆளுக்கு ஆள் குத்துப்படுகிறார்கள். பிரச்சினைப்படுகிறார்கள்.  இந்த நிலையில் யாரை நம்புவது, எதை நம்புவது?
எனக்குத் தெரிந்தவர்கள் என்று நான்குபேர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். அப்படியென்றால், நாங்கள் யாருக்கு வாக்களிப்பது? அதை விட இதில் யாருக்குப் போட்டுத்தான் என்ன ஆகப் போகிறது? ஏதோ சின்னப் பெடியளின் விளையாட்டுப் போல கண்டவன் நிண்டவன் எல்லாம் போட்டி போடுகிறான். போற போக்கில ஊருக்குள்ள வாக்குப் போடவே ஆளில்லாமல் எல்லோரும் போட்டிபோடுவாங்கள் போல இருக்கிறது.
தெருவில் பார்த்தீர்கள் என்றால் தெரியும் எவ்வளவு காசை இப்படி வீணாக இறைச்சுக் கொட்டியிருக்கிறார்கள் என்று.   யாருக்கு மனச்சாட்சி இருக்கிறது?   இந்தப் பணத்தை வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொண்டு போய் உதவியிருக்கலாம். என்ன இருந்தாலும் வெளியில் இருந்து வந்த ஆக்களைவிட எங்களுக்கு எப்பவும் உதவிய மகேஸ்வரனை ஆதரிக்கலாம் என்று நினைக்கிறேன்.
கஜேந்திரன் (கொடிகாமம்)38 வயதுஆசியர்

எங்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் ஒரு சோதனைக்கட்டமாகவே வந்துள்ளது. எல்லோரும் தவறு விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். மக்களுடைய மனநிலை என்ன, அவர்களுடைய தேவை என்ன என்று அறிவதில் எவருக்குமே அக்கறை இல்லை. இதற்குக் காரணம் இவர்கள் எல்லோரும் நீண்டகாலமாக மக்களுடன் தொடர்பில்லாமல் இருந்து விட்டனர்.   இப்போதுள்ள நிலைமையில் அரசாங்கத்துக்குத்தான் நன்மைகள் அதிகரித்துக் கொண்டு போகிறது. அரசாங்கத்துக்கான ஆதரவு வாக்குகள் அப்படியே இருக்கப் போகிறது.

சிலவேளை இன்னும் அது கூடலாம். அதே வேளை தமிழ்த் தேசியத்துக்கான வாக்குகள் உடைந்து மூன்றாகச் சிதறப்போகின்றன. இதற்கு, முன்னர் போல இனியும் மக்களுக்கு உதவிகளைச் செய்து கொள்ளாமல், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றாமல் தமிழ்த்தேசியத்தைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்க முடியாது.  அப்படி உதவி செய்து கொண்டு உரிமைக்கான அரசியலைப் பற்றிக் கதைத்தால் எந்தச் சக்தி வந்தாலும் எங்களை அசைக்க முடியாது என்றார்.
சிவகுமார் முள்ளியவளை (தற்போது கோண்டாவிலில் வசிக்கிறார்)

தேர்தல் வந்திருக்கு என்று சொல்லவே சிரிப்புத்தான் வருகிறது. அதில் போட்டியிடுகிற ஆட்களைப் பார்க்க இன்னும் சிரிப்பாகவே இருக்கிறது. நான் யாருக்கும் வாக்களிக்கவே போவதில்லை.  வன்னியில் நாங்கள் பட்ட பாட்டுக்கு இப்பதான் கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறம்.   இந்த நிம்மதியைக் கெடுக்காமல் விட்டால் போதும்.

இப்போது தேர்தலில் வாக்களிக்கக் கூடிய மனநிலை எங்களுக்கு இல்லை. அதை விட எங்கட வாக்கை எங்கே போய் இந்த முறை அளிக்கவேண்டும் என்றும் தெரியவில்லை.
நாங்கள் குடும்பமாகவே வாக்களிக்கப் போவதில்லை. முதலில் எங்கட ஊருக்குப் போகவேணும். அதுக்குப் பிறகுதான் எதுவும் என்றார்.
விமலராணி (பெண்) கோண்டாவில்.நாங்கள் கட்டாயம் வாக்களிப்போம். எங்களுக்கு விருப்பமான ஒரு தரப்பக்குத்தான் வாக்கு போடப்போகிறோம். ஆனால் அதை வெளிப்படையாக நாங்கள் சொல்ல விரும்பவில்லை.    இன்னும் எங்களுக்குத் தேவைகள் நிறைய இருக்கின்றன. நாட்டுப் பிரச்சினை இன்னும் தீரவேயில்லை. அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டே போகிறது. நாங்கள் எங்கட வாக்குகளால் எங்கட விருப்பங்களைத் தெரிவிக்க வேணும். யாழ்ப்பாணத்தில் தான் போட்டியிடுகிற வேட்பாளர்களின் தொகை அதிகம் என்கிறார்கள். யாழ்ப்பாணத்தில்தான் வாக்களிப்பவர்களின் தொகையும் அதிகம் என்று வரலாறு சொல்ல வேணும்.
திருக்குமார் ( சாவகச்சேரி)நான் பொதுவாக எந்த அபிப்பிராயம் சொல்ல விரும்பவில்லை. என்னுடைய வீடு இன்னும் என்னுடைய கைகளுக்குக் கிடைக்கவில்லை. ஒன்றுக்கு இரண்டு வீடுகள் எனக்கு உண்டு. ஆனால் நான் யாழ்ப்பாணத்தில் இப்ப வாடகை வீட்டில் இருக்கிறேன். என்னுடைய வீட்டுக்குப் போகும் ஒரு நிலை வந்தால்தான தேர்தலுக்கு வாக்களிப்பதைப் பற்றிச் சிந்திக்க முடியும்.
என்னுடைய வீட்டை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகவே நான் போராடிக் கொண்டிருக்கிறேன். அந்த அயலில், என்னுடைய வீட்டில் இன்னும் படையினர் நிலை கொண்டிருக்கிறார்கள்.  முதலில் இந்த நிலை மாறட்டும். பிறகு தேர்தலைப் பற்றி யோசிக்கலாம் என்றார்.
பெண் (வயது 32)ஊர்காவற்றுறை நீண்ட காலத்துக்குப் பிறகு ஊருக்குப் போயிருக்கிறம். இவ்வளவு காலம் யாழ்ப்பாணத்தில்தான் இருந்தோம்.    தீவுப் பகுதியைப் பொறுத்தவரையில் அங்கே எல்லாக் கட்சிகளும் வருவதில்லை. ஒன்றிரண்டு கட்சிகள்தான் வந்திருக்கின்றன. 
அந்தப் பகுதியில் யாழ்ப்பாணத்தைப் போல சனத்தொகையும் அதிகம் இல்லைதான். அதனால் தானோ என்னவோ தெரியவில்லை, யாழ்ப்பாணத்தைப்போல போட்டிகள் குறைவு.  அங்க தனிய ஒரு கட்சிதான் நிற்குது, அது ஈ.பி.டி.பி.தான் ஏன் மற்றக் கட்சிகள் வரவில்லை என்று தெரியவில்லை. 
நாங்கள் கனகாலத்துக்குப் பிறகு வாக்களிக்கப் போகிறோம் என்கிறது ஒரு மகிழ்ச்சிதான்.
சுதா சங்குவேலி 25 (பிரதேச செயலக உத்தியோகத்தர்.)நாங்கள் எங்களுக்கென்றொரு அடையாளத்தோடு எப்பவும் இருக்க வேணும். என்னதான் சோதனைகள் வந்தாலும் தளரக்கூடாது. இப்ப வந்திருக்கிறதும் ஒரு சோதனைக் காலம் தான்.  தமிழருக்கு எப்பவும் சோதனைக்காலம்தான்.  ஆனால், சனங்களுக்குத் தேர்தலில் அக்கறை இல்லை. எனக்கும் பெரிசா அக்கறை இல்லை தான். ஆனால் வாக்களிப்பதாக இருந்தால்.  அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குத்தான்.  சரியோ பிழையொ இந்தத் தடவை ஒருக்கால் போட்டுப் பார்ப்போம்.
ஆனால், மக்களைத் திசை திருப்புவதற் கென்றே ஊர் ஊராக ஏராளம் குழுக்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் இந்தமுறை வாக்களிக்க மாட்டார்கள் போலவே தெரிகிறது.   எங்கள் வீட்டில் கூட வாக்களிப்பதா இல்லையா என்று போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது. எங்கள் தங்கை தனக்குப் படிப்பித்த ஆசியர் ஒருவர் தேர்தலில் நிற்பதால் அவருக்கே வாக்களிப்பதாகச் சொல்கிறாள்.  நான் இன்னொரு கோணத்தில் சிந்திக்கிறேன்.  இப்படித்தானே பல இடங்களிலும் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக