வியாழன், 25 மார்ச், 2010

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் கோவிலில் உருவ வழிபாடு நடத்துவதற்குத் தமிழக அரசு விதித்த தடை செல்லும் என்று சென்னை [^] உயர்நீதிமன்றம் [^] தீர்ப்பளித்துள்ளது.

வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகள், சத்திய ஞானசபை என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த சபைக்கு வருகிறவர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் பற்றிய விதிமுறைகள் அனைத்தும் 18.7.1872 அன்று உருவாக்கப்பட்டன.

வள்ளலார் வகுத்த கொள்கைகளின்படி ஜோதி மட்டுமே வணங்க வேண்டும். அதன் அடிப்படையில், சத்திய ஞானசபையில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், சத்திய ஞானசபையின் பரம்பரை அர்ச்சகராக பணியாற்றும் சபா நாதா ஒளி சிவாச்சாரியார் அங்கு சிவலிங்கத்தை ஏற்படுத்தி அங்கு வரும் பக்தர்களுக்கு லிங்க பூஜை செய்ததாக புகார் [^]கள் வந்தன.

உருவ வழிபாடு கூடாது என்று கூறிய வள்ளலார் அமைத்துள்ள சபையில் சிவலிங்கத்தை உருவமாக வைத்து வணங்கினால் அது வள்ளலாரின் கொள்கைகளை புறக்கணிப்பதாக அமையும் என்று குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதுகுறித்து அரசு விசாரணை நடத்தியது. இறுதியில், வள்ளலாரின் கொள்கைகளின்படி அங்குள்ள கருவறையில் ஜோதி மட்டுமே ஏற்ற வேண்டும். வேறு உருவ வழிபாடு அங்கு இருக்கக்கூடாது என்று 18.9.2006 அன்று விழுப்புரம் இந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை உறுதி செய்து 30.4.2007 அன்று இந்து அறநிலையத்துறையின் கமிஷனர் மற்றொரு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த உத்தரவுகளை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சபா நாதா ஒளி சிவாச்சாரியார் 2 மனுக்களை தாக்கல் செய்தார்.

இந்த மனுக்களை நீதிபதி கே.சந்துரு விசாரித்து தீர்ப்பு அளித்தார். அவர் அளித்த தீர்ப்பில்,

தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை சரியாக ஆராய்ந்து பார்த்தால் வள்ளலாரின் கொள்கைகள் புலப்படும். உருவ வழிபாடு கூடாது, அதை புறக்கணிக்க வேண்டும் என்பதையும், தீயை ஜோதி வழியில் வழிபடலாம் என்பதையும் அரசு உத்தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

வள்ளலார் தொடங்கிய சபையில் மதங்களுக்கு இடம் கிடையாது. ஆனால் மனிதாபிமானத்துக்குத்தான் அங்கு மிகப்பெரிய இடம் அளிக்க வேண்டும். அங்கு சாதி, மத வேற்றுமைகள் கிடையாது. ஜீவகாருண்யம் என்ற மனிதர்கள் மீது காட்டப்படும் அன்பு மட்டும்தான் அங்கு மேலோங்கி நிற்க வேண்டும். அங்கு வன்முறைக்கு இடம் இல்லை. ஆனால், ஏழைகளுக்கும், ஊனமுற்றோர்களுக்கும் பாசமும், பற்றும் காட்டப்படும்.

எனவே, இதன் அடிப்படையில் பார்க்கும்போது அரசு அதிகாரிகள், வள்ளலாரின் கொள்கைகளை சரியாக புரிந்துகொண்டு உத்தரவு பிறப்பித்துள்ளனர். வள்ளலார் உருவாக்கிய பாரம்பரியங்களிலிருந்து அரசு அதிகாரிகள் விலகி செல்லவில்லை. எனவே, அரசு அதிகாரிகள் முரணாக செயல்பட்டார்கள் என்று மனுதாரர் கூறமுடியாது. எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக