வியாழன், 18 மார்ச், 2010

சட்டத்தின் அரிச்சுவடி கூட தெரியாத நீதிபதி...

சென்னை: கணவரை அடித்து கூரையில் தொங்க விட்டு விட்டு அவரது கண் முன்பாகவே அவரது மனைவி மற்றும் மகளைக் கற்பழித்த கயவர்கள், அரசு வக்கீல், போலீஸ் மற்றும் மாவட்ட நீதிபதியின் குளறுபடிகளால் விடுதலையாகியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கண்டித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட பெண் தற்போது திருமணமாகி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வருவதால் மறு விசாரணைக்கு உத்தரவிட விரும்பாமல் அபராதம் மட்டும் கட்டுமாறு குற்றவாளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வெளியே ஜெயராஜ் என்பவருக்கு தனியாக வீடு உள்ளது. இங்கு ஜெயராஜ் (46), அவரது மனைவி சுகந்தி (42), மகள் சாந்தி (17) மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் ஐடிஐ மாணவர் தங்கிப் படித்து வந்தார். அப்போது சாந்தி பிளஸ்டூ மாணவியாக இருந்தார்.
இந்த நிலையில், கடந்த 22.11.95 அன்று அதிகாலை 2.30 மணிக்கு 8 பேர் கொண்ட கும்பல், வீட்டுக்கு வந்து வீட்டு காலிங் பெல்லை அழுத்தினர். தங்களை போலீசார் என்றும் விசாரணைக்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். வீட்டுக் கதவை திறக்க யாரும் முன்வரவில்லை என்பதால், அவர்கள் முகமூடி அணிந்தபடி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்துவிட்டனர்.

உள்ளே நுழைந்த அந்தக் கும்பல் ஜெயராஜை அடித்து உதைத்தது. பின்னர் மனைவி, குழந்தைகள் முன்னிலையில் அவரை நிர்வாணமாக்கி வீட்டின் கூரையில் இருந்த மின்விசிறியை தொங்கவிடும் கொக்கியில், மனைவியின் சேலையை வைத்துக் கட்டி, ஜெயராஜை தொங்க விட்டனர்.
அத்தோடு நில்லாமல், அவரது கால்களையும் கட்டி அடி வயிற்றில் கட்டையால் தாக்கினர்.
இந்த நிலையில், சுகந்தியை 4 பேரும், மகள் சாந்தியை 4 பேரும் பிடித்துக் கொண்டனர். அடுத்த 2 சிறு குழந்தைகளையும் (ஒரு மகள், ஒரு மகன்) அறை ஒன்றில் போட்டு அடைத்தனர். ஐ.டி.ஐ. மாணவரை மற்றொரு அறையில் போட்டு அடைத்தனர்.
பின்னர் அந்தக் கொடூரர்கள், சுகந்தியையும், சாந்தியையும் கற்பழித்தனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.
அவர்களது வீடு மிகவும் ஒதுக்குப்புறமாக இருந்ததால் யாரும் உதவிக்கு வரவில்லை. இரவு முழுவதும் மூன்று பேரும் கதறி அழுதபடி இருந்தனர். மறுநாள் காலையில் ஹட்கோ போலீஸ் நிலையத்தில் ஜெயராஜ் புகார் கொடுத்தார். ஓசூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
உள்ளூர் போலீஸ் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த விசாரணையில் முனிராஜ் என்பவர் சிக்கினார். இதேபோல ரவி, மது என்ற டிங்கு, சின்னராஜ், துரைசாமி, சந்திரப்பா ஆகியோரும் கைதாகினர்.
கைது செய்யப்பட்ட 8 பேர் மீது 3.1.97 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்து விட்டனர்.

இதுதொடர்பாக ஓசூர் உதவி செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி, 20.7.04 அன்று அளித்த தீர்ப்பில், 6 பேருக்கும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்தார்.
இந்தத் தண்டனையை எதிர்த்து சந்திரப்பா, முனிராஜ், ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர்.
சட்டத்தின் அரிச்சுவடி கூட தெரியாத நீதிபதி...
அதை விசாரித்த நீதிபதி நாகமுத்து,
இறந்து போன 2 பேர் மீது குற்றப்பதிவு செய்தது, உதவி செசன்ஸ் கோர்ட் நீதிபதி செய்த மிகப் பெரிய சட்ட விரோதமான காரியம். குற்றவாளிகள் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையும் முறைப்படி இல்லை. குற்றம்சாட்டப்பட்டவரை விசாரணையின் போது சாட்சிகள் (பாதிக்கப்பட்டவர்கள்) மூலம் கோர்ட்டில் அடையாளம் காட்ட வேண்டும் என்ற சட்டத்தின் அரிச்சுவடியைக் கூட போலீசார், அரசுத் தரப்பு, நீதிபதி ஆகியோர் பின்பற்றவில்லை.
குற்றம் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டாலும், இவர்தான் அந்தக் குற்றத்தைச் செய்தார்' என்று சாட்சிகள் யாராவது அவர்களை அடையாளம் காட்டினால்தானே, அவர்களை குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்க முடியும்? இதுகூடவா அவர்களுக்குத் தெரியாது? இந்த வழக்கின் சாட்சி விசாரணையை உதவி செசன்ஸ் கோர்ட் நீதிபதி மவுனியாக இருந்து வேடிக்கைதான் பார்த்திருக்கிறார்.
அடையாள அணிவகுப்பில் ஏற்பட்ட குளறுபடிகளையும் அரசு வக்கீல் சரிப்படுத்த முயலவில்லை. பெருமாள் என்பவரை ஓசூர் போலீசார் குற்றவாளியாகக் காட்டினர். ஆனால் அவரது பெயரை குற்றவாளிகள் பட்டியலில் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீக்கிவிட்டனர். இதற்கான காரணம் சரிவர விளக்கப்படவில்லை.

சம்பவ இடத்தில் இருந்து கிடைத்த கைரேகையை சரிபார்ப்பதற்கு 6 மாதம் தாமதம் ஏற்பட்டு உள்ளது. கொள்ளையடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நகை போன்ற பொருட்களை சாட்சிகள் மூலம் அடையாளம் காணவில்லை. அதற்கு உதவி செசன்ஸ் கோர்ட் நீதிபதி உத்தரவிடவுமில்லை. அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சி விசாரணையை முறைப்படுத்தாதது துரதிருஷ்டவசமானது. விசாரணை அதிகாரி சரியாக விசாரணை நடத்தாதது மட்டுமல்ல, நல்லவிதமாக சாட்சியும் அளிக்கவில்லை.

விசாரணையின் போது போலீசார் கைப்பற்றி இருந்த ஆவணங்கள், சாட்சியங்கள் ராளமாக இருந்தாலும், அவற்றை சாட்சி விசாரணையின்போது சரியாக பயன்படுத்தவில்லை. இதற்கு போலீசார், அரசு வக்கீல் மற்றும் அந்த நீதிபதிதான் பொறுப்பு. சாட்சி விசாரணையில் நீதிபதி முழு கவனம் செலுத்தவில்லை.

ஒப்புதல் வாக்குமூலம் விவகாரத்தில், சட்ட மாணவன் ஒருவனுக்கு தெரிந்த விஷயம் கூட இவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. சரிவர கடமையாற்றாமல், இவ்வளவு குளறுபடிகளுக்கும் போலீசார், அரசு வக்கீல், நீதிபதி ஆகியோர் சமமாக பங்களித்துள்ளனர். நடந்தது முழுக்க முழுக்க கேலிக்கூத்தான சாட்சி விசாரணை. விசாரணையில் இவ்வளவு குளறுபடிகளை வைத்துக் கொண்டு இவர்களை தண்டிக்க முடியாது.
பெஸ்ட் பேக்கரி வழக்கைப் போல இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தலாம். ஆனால் குற்றம் நடந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. மேலும், பாதிக்கப்பட்ட அந்த மாணவி தற்போது ஒருவரை திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்வதாக கேள்விப்பட்டேன். எனவே மறு விசாரணை என்ற எண்ணத்தை கைவிட்டு விட்டேன்.

ஆனால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்க அரசுக்கு பரிந்துரைக்கிறேன் என்று உத்தரவிட்டார்.
அரசு வக்கீல், உதவி செஷன்ஸ் நீதிபதி, காவல்துறை ஆகியோரின் குளறுபடிகளால் தற்போது கொடூரமான கற்பழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே விடுதலையாகியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக