புதன், 10 மார்ச், 2010

மும்பை: இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல, அதனை மற்ற மொழிகளைப் பேசுவோர் மீது திணிக்கக் கூடாது என்று மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார்.

சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் மருமகனான ராஜ்தாக்கரே மாமனாரின் கட்சியில் இருந்து பிரிந்து வந்து தனியாக மஹாராஷ்டிரா நவநிர்மான் என்ற அமைப்பை தொடங்கி நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டன.

ஆண்டுவிழாவை ஒட்டி மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்தாக்கரே பேசுகையில்,

'எம்என்எஸ் அமைப்புக்கு நான்கு வயதாகி விட்டது. நாங்கள் இன்னும் மராத்தி மொழிக்கான கொள்கையை சமரசப்படுத்திக் கொள்ளவில்லை.

மற்ற மொழி பேசுவோர் மீது இந்தி மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்தி ஒன்றும் இந்தியாவின் தேசிய மொழி அல்ல. அதை எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழி. அவ்வளவே.

மகாராஷ்டிரா நவநிர்மான் கட்சியை நான் தொடங்கும் முன்னர், என் பின்னால் இத்தனை பேர் வருவார்களா என்று பலமுறை தயங்கினேன். ஆனால் என்னால், இந்த அமைப்பால் சாதிக்க முடிந்தது என்றால், அது தொண்டர்களின் பலத்துக்கு அடுத்தபடியாக மீடியாவின் கவனிப்பால் தான் சாத்தியமானது.

நாங்கள் நடத்தும் ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்தையும், போராட்டத்தையும் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் தவறாமல் செய்தியாக்கி வெளியிட்டன.

இதன் மூலமே எங்களுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சி சாத்தியமானது என்பதை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன்.

பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்.

இந்த சட்டத்தை எதிர்க்கும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் முதல்வர் பதவியில் இருந்து தான் விலகியவுடன் அப்பதவியில் தனது மனைவியை அமர்த்தினார்.

அப்படிப்பட்ட லாலு பெண்களுக்கான ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் அர்த்தமில்லை' என்று தாக்ரே பேசியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக