இரா. செழியன்
தமிழ்த் திரை உலகில் ஒப்பாரும் மிக்காருமில்லாத நடிகராக, இசைத் தமிழின் முடிசூடா மன்னராக, முதல் சூப்பர் ஸ்டாராக விளங்கிய எம்.கே. தியாகராஜ பாகவதரின் நூற்றாண்டு நிறைவு விழா 2010 மார்ச் முதல் நாள் (இன்று) தொடங்குகிறது.
மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம்.
ர்தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம்.
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்துவான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன் அவருக்குக் கர்நாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். அதற்கு எத்தகைய சன்மானமும் வேண்டாமென்று அவர் கூறிவிட்டார். கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற அதேநேரத்தில், நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய தினம் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு பாகவதர் என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.
1926-ல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.ராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ்.டி.சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர். 1934-ல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களை பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்கு பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது.
அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதாரா (1936), சத்தியசீலன் (1936-பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்தது), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் ஒன்றை ஒன்று மிஞ்சும் அளவுக்கு வெற்றிப்படமாக வந்தபடி இருந்தன. வீதிகளில், வேலை செய்யும் இடங்களில், வயல்களில், சாலையோரங்களில், ஒற்றையடிப் பாதைகளில், தோட்டம், துரவுகளில், எங்கும் பாகவதரின் கந்தர்வ கானம் எதிரொலித்தது.
ர்திரையுலகில் பாகவதர் அடைந்திருந்த உன்னதமான புகழையும், பெருமையையும் கண்டு பொறாமையடைந்த சிலர், அவரைப் பற்றி அடிப்படையற்ற அவதூறுகளைக் கிளப்பியவாறு இருந்தனர். இந்தச் சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் பற்றிய கொலை வழக்கு வந்தது.
ர்அதற்கு முன்பு பல்வேறு குற்றங்களுக்காக ஏழு ஆண்டுகள் தண்டனை பெற்று ராஜமுந்திரி சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபொழுது வழியில் போலீஸப்ரிடமிருந்து தப்பியோடி மீண்டும் சென்னையில் பிடிபட்டு அந்தமான் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டார். 1942 மார்ச் மாதத்தில் ஜப்பானியப் படை அந்தமானைக் கைப்பற்றி அங்குள்ள சிறைவாசிகளை வெளியேற்றியதும் சென்னைக்குத் திரும்பிய லட்சுமிகாந்தன், "சினிமா தூது' என்ற கீழ்த்தரமான மஞ்சள் ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார்.
திரையுலக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பற்றி சினிமா தூது இதழில் எழுதப்பட்ட அவதூறுகளைக் கண்டித்து பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், சீராமுலு நாயுடு உள்ளிட்ட பலர் ஆளுநர் ஆர்தர் ஹோப்பிடம் சமர்ப்பித்த மனுவின்மீது போலீஸப்ர் விசாரணை செய்து அவதூறுகள் கிளப்பிய சினிமா தூது பத்திரிகையைச் சட்டப்படி தடைசெய்தனர். அதன் பிறகு, "இந்து நேசன்' என்ற மற்றொரு பத்திரிகை மூலம் பழையபடி வீண்பழிகளைச் சுமத்திப் பணம் பறிப்பதில் லட்சுமிகாந்தன் ஈடுபட்டார்.
1944 நவம்பர் 8-ம் நாள் சென்னை வேப்பேரியிலுள்ள கால்நடை மருத்துவமனை அருகில் ரிக்ஷாவில் சென்றுகொண்டிருந்த லட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். அதையொட்டித் தன்னுடைய வழக்கறிஞரின் ஆலோசனைப்படி அருகிலிருந்த காவல்நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட காயம் பற்றிப் புகார் செய்துவிட்டு, சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். அங்கு தங்கியிருந்த லட்சுமிகாந்தன் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
1944 நவம்பர் 27-ம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி லட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது.
அதன்மீது மேலும் லண்டன் ப்ரிவி கவுன்சில் அமைப்புக்கு முறையீடு செய்யப்பட்டது. வழக்கை மீண்டும் விசாரணை செய்யுமாறு ப்ரிவி கவுன்சில் தந்த உத்தரவின்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகளால் மறுவிசாரணை தொடங்கியது. பிரபலமான வழக்கறிஞர் வி.எல்.எத்திராஜ் முன்வைத்த வாதங்களும், ஆதாரங்களும் நடத்தப்பட்ட வழக்கில் தரப்பட்ட வலுவற்ற புனைந்துரைகளை முழுமையாகச் சிதறடித்தன.
அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாக சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கத்தியைப் பார்த்து மனுவை விசாரித்த நீதிபதி ஒருவர் கூறியதாவது: இந்தக் கத்தியால் ஓர் எலியைக்கூட கொன்றிருக்க முடியாது.
இந்த அளவுக்கு மோசமான ஆதாரங்கள் மீது திரையுலக நட்சத்திரங்களான தியாகராஜ பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் முப்பது மாதங்களுக்கு இருண்ட சிறைச்சாலைக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.
முன்னர் ஒரு மன்னர்போல வாழ்ந்த பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.
நடிப்பதிலோ, பொருளீட்டுவதிலோ அவருக்கு நாட்டம் இல்லாமல் போனது. வறுமையால் அவர் வாடிவிட்டார் என்று கூற முடியாது. கடைசிவரை ஒரு கவரிமான்போல அவர் வாழ்ந்தார். பவளக்கொடி படம் தொடங்கி ஹரிதாஸ் வரை அவர் சிறை செல்வதற்குமுன் நடித்த ஒன்பது படங்கள்தான் பெரும் வெற்றியைப் பெற்றன. சிறையிலிருந்து வெளிவந்ததும் ராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த படங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றாலும், பல கோடி மக்கள் இதயத்தில் அவருடைய பாட்டுகள் என்றும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். நவம்பர் 1, 1959-ல் தியாகராஜ பாகவதர் மறைந்தாலும் அவர் வாரி வழங்கிய இசைச் செல்வம், தமிழ் மக்களுக்கு நிலையான பெரும் பேறாக இருந்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக