பிப்ரவரி 18,2010,00:00 IST
சென்னை : ""என்னை போன்று ஏராளமான குழந்தைகளை மும்பைக்கு கடத்தி, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் திருநங்கை ஒருவர் கண்ணீர்மல்க புகார்
சென்னை பொழிச்சலூரை சேர்ந்தவர் ஜோதிகா (எ) ராஜசேகரன் (25);அரவாணி. இவர், புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: குருசாமி - ஆவுடைதங்கம் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தேன். எனக்கு புனிதா என்ற அக்காவும், சரவணக்குமரன் என்ற அண்ணனும் உள்ளனர். எனது குடும்ப சூழ்நிலை காரணமாக, நான்கு முதல் எட்டாவது வகுப்பு வரை திருவேற்காட்டில் உள்ள மலேசியன் சோசியல் சர்வீஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆண்கள் விடுதியில் தங்கி, வேலப்பன் சாவடியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நடுநிலைப் பள்ளியில் படித்தேன். 14 வயதில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது, எனது உடலில் பருவமாற்றத்தை உணர்ந்தேன். நடை, உடை பாவனைகள் பெண் தன்மையுடன் மாற ஆரம்பித்த
இந்த சமயத்தில் எங்கள் பகுதிக்கு பிச்சையெடுக்க வரும் திருநங்கைகள் பிரியா, பூஜா, ஆயிஷா, வேல்விழி, மோனல், ரேஷ்மா மற்றும் நிரோஷா ஆகியோர் என்னை அணுகினர். இவர்கள் நுங்கம்பாக்கத்தில் வசிக்கின்றனர். இவர்கள், நான் பெண் போன்று இருப்பதாகவும், அழகாக இருப்பதாகவும் ஆசையோடு பேசினர். கடந்த 1999ம் ஆண்டு அவர்கள் வசிக்கும் நுங்கம்பாக்கத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு எனக்கு பெண் உடை அணிவித்து, அழகுப்பார்த்தனர். மூன்று வாரங்கள் அங்கேயே தங்க வைத்து, பிச்சை எடுக்க அவர்களுடன் அழைத்து சென்றனர். பின், புனேவிற்கு அழைத்து சென்ற அவர்கள், அங்கு வைத்து என்னை வடமாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளுக்கு விற்றனர். அவர்கள் என்னை ஒரு சிறிய அறையில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக விபசாரத்தில் ஈடுபடுத்தினர். என்னுடைய சம்மதம் இல்லாமல் 2001ம் ஆண்டு கடப்பாவுக்கு அழைத்து சென்று, நாகண்ணா என்ற மருத்துவரிடம் ஆண் உறுப்பை அகற்றினர்.
புனேவில் 40 நாட்கள் சடங்கு முடிந்ததும், பாலியல் தொழிலில் தொடர்ந்து ஈடுபடுத்தி பணம் சம்பாதித்தனர். ஒத்துழைக்க மறுத்தால் அடி, உதை மற்றும் சூடு போட்டனர். கடந்த 2005ம் ஆண்டு, ஒரு வாடிக்கையாளர் மூலமாக தப்பித்து சென்னை வந்து, தோழியர் வசிக்கும் நடராஜபுரம் மாமண்டூரில் தஞ்சமடைந்தேன். இதையறிந்த அக்கும்பல் நான் பிச்சையெடுக்கும்போது மீண்டும் புனேவுக்கு கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்தினர். கடந்த 2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தப்பித்து தமிழகம் வந்தேன். என் தந்தை வீட்டிற்கு சென்றேன். அவர்களும் என்னை ஏற்க மறுத்துவிட்டனர். இதையறிந்த திருநங்கை கும்பல் என்னை மீண்டும் கடத்தி, விபசாரத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கிறது. இதனால், ஆறு மாதங்களாக பதுங்கி, ஓவ்வொரு இடமாக அலைந்து வருகிறேன்.
இரண்டு வாரங்களுக்கு முன் தி.நகருக்கு சென்றுவிட்டு, பரங்கிமலைக்கு ரயிலில் திரும்பினேன். அப்போது, என்னை வழிமறித்த திருநங்கை கும்பல், மொபைல்போன் மற்றும் மூன்று சவரன் செயினை அடித்து பிடுங்கி, ஆட்டோவில் கடத்த முயன்றது. ஆகவே, அக்கும்பலால் மீண்டும் கடத்தப்படும் அபாயமும், என் உயிருக்கும் பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையும் உள்ளது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், என்னை போன்று ஏராளமான குழந்தைகளை மும்பைக்கு கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்குவதையும் தடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. புகாரை மத்திய குற்றப்பிரிவு போலீசாரை விசாரிக்கும்படி கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார்.
அவர்களுக்கு அவர்களே எதிரி: ஒரு காலத்தில் திருநங்கைகள் என்றால் சமுதாயம் எள்ளி நகையாடியது. குடும்பத்தினர் கூட அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பாலியலுக்கு மட்டுமே அவர்கள் பயன்படுவார்கள் என்று கருதப்பட்டது. தற்போது இந்த நிலை மாறியுள்ளது. திருநங்கைகளின் உரிமைகள் பெற்றுத் தருவதில் தன்னார்வ அமைப்புகள் பல ஈடுபட்டுள்ளன. இவை, திருநங்கைகள் பிச்சை எடுப்பதை தடுக்க சுயதொழில்கள் துவக்கி, உதவுகின்றன. பெற்றோரால் நிராகரிக்கப்படும் திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதோடு, பாலியல் கொடுமையிலிருந்து தடுக்க பல்வேறு முயற்சிகளிலும் இறங்கியுள்ளன. இந்த வாய்ப்பை பல திருநங்கைகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். இருப்பினும் ஒரு சிலர் தங்களின் பழக்க, வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. தொடர்ந்து, பிச்சை எடுப்பதையும், பாலியல் தொழிலில் ஈடுபடுவதையும் கொண்டுள்ளனர். திருநங்கைகளே, தவிக்கும் திருநங்கைகளுக்கு ஆதரவு தருவதுபோல் அவர்களை ஏமாற்றி, கடத்தி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Dinamalar - No :1 Tamil News Paper. Designed and Hosted by Web Division,Dinamalar.
Contact us
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக