புதன், 24 பிப்ரவரி, 2010

கனடிய புலிகளின் கோஷ்டி மோதலின் பிரதிபலிப்பே ‘உதயன்’ பத்திரிகை மீதான தாக்குதல்!

கனடா கந்தசாமி
அண்மையில் கனடாவிலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகைக் காரியாலயம் தாக்கி சேதமாக்கப்பட்ட செய்தி, கனடிய ஆங்கில ஊடகங்களிலும், உலகம் முழுவதுமுள்ள தமிழ் ஊடகங்களிலும் ஒரு முக்கிய செய்தியாக வெளியாகியிருந்தது. இந்தத் தாக்குதல், ‘இனம் தெரியாத’ ;நபர்களினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் குறிப்பிட்டன. கடந்த காலங்களில், அதாவது மே 18, 2009 ஆணடிற்கு முன்னர், தமிழ் ஊடகங்களில் ‘இனம் தெரியாத’ என்ற சொல்லு புலிகளைக் குறிப்பதற்கே பாவிக்கப்பட்ட ஒன்று என்பது, அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். ஏனெனில் புலிகள் உரிமை கோரமுடியாத சூழ்நிலையில் கடந்த காலத்தில் செய்த கொலைகள் எல்லாவற்றையும், ‘இனம் தெரியாத நபர்களினால் செய்யப்பட்ட கொலைகள்’ என்ற சொற்பதத்தின் மூலமே, தற்பொழுது சந்தேகமற புலி ரவுடிகளால் தாக்குதலுக்குள்ளான கனடிய ‘உதயன்’ முதல் எல்லா தமிழ் ஊடகங்களும் குறிப்பிட்டு வந்துள்ளன.
கனடிய உதயன் பத்திரிகை தற்பொழுது தாக்குதலுக்குள்ளானதற்கு, அது அப்படியொன்றும் புலிகளுக்கு எதிரான பத்திரிகை என்பது காரணமல்ல. 2009 மே 18ம் திகதி புலிகள் வன்னி மண்ணிலிருந்து முற்றுமுழுதாக அரச படைகளால் துடைத்தெறியப்பட்ட பின்னர், புலம் பெயர் புலிகள் மத்தியில், புலிகளின் சொத்துக்களுக்காக தொடங்கிய நாய்ச்சண்டையின் ஒரு வெளிப்பாடே, உதயன் மீதான தாக்குதலுக்குக் காரணமாகும். கனடாவிலும் சரி, ஏனைய புலம் பெயர் நாடுகளிலும் சரி, புலிகளின் தீவிர ஆதரவாளர்களாகக் கடந்த காலங்களில் பவனி வந்தவர்கள், சாதாரண தமிழ் மக்கள் அல்ல.
புலம் பெயர் நாடுகளில் கடன் அட்டை மோசடிகளில் ஈடுபட்டவர்கள், வியாபாரம் என்ற போர்வையில் வங்கிக்கடன் பெற்று ஏமாற்றியவர்கள், கொள்ளை இலாப வியாபாரிகள், ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள், புலிகளுக்காக நிதி வசூலித்து ஏப்பமிட்டவர்கள், ‘ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாக’ வேசம் போட்ட ‘அறிவாளிகள்’, இலவச பத்திரிகை நடாத்தும் ‘ஊடக வியாபாரிகள்’ என பல தரப்பட்டவர்கள் அடங்குவர். இவர்களில் கனடிய உதயன் பத்திரிகை ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் கடைசி வகையைச் சேர்ந்தவர்.

யாழ்ப்பாணத்தில் தீவுப் பகுதியைச் சேர்ந்த லோகேந்திரலிங்கம், ஆரம்ப காலங்களில் அங்கு மதிப்புக்குரிய ஆசிரியர் ஆ.சபாரத்தினம் அவர்கள் தலைமையில் இயங்கிய ‘காவலூர் இலக்கிய வட்டத்தில்’ ஒரு ‘பின் வரிசை மாணவனாக’ இருந்தது உண்மைதான். அந்த வட்டத்தில் இருந்தவர்களில் அநேகமானோர் முற்போக்கான கருத்துக்களையும், இடதுசாரி இயக்கத் தொடர்புகளையும் கொண்டிருந்ததால், லோகேந்திரலிங்கமும் அவர்களுடன் ஒரு ஒத்தோடியாக சில காலம் இருந்ததும் உண்மைதான். ஆனால் கனடாவுக்கு அவர் இடம் பெயர்ந்த பின்னர், இயல்பிலேயே புகழ் விரும்பியான அவருக்கு கனடா மண் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது.
கனடாவில் அவர் வந்த காலத்தில் சண்டித்தனங்களிலும், பண பலத்திலும் புலிகள் மேலோங்கி நின்றதைக் கண்ட லோகேந்திரலிங்கம், ‘இயற்கையாகவே’ அவர்களது நெருங்கிய கூட்டாளியாகிச் செயற்படத் தொடங்கிவிட்டார். புலிகளின் எந்த நிகழ்ச்சியானாலும், லோகேந்திரலிங்கம் முன் வரிசையில் நிற்பார். அதேபோல, எந்த வர்த்தக நிறுவன நிகழ்ச்சியானாலும் அங்கு போட்டோவுக்கு ஒரு போஸ் கொடுக்கத் தவறமாட்டார். அநேக சந்தர்ப்பங்களில் அவரது உதயன் பத்திரிகையின் முக்கியமான தலைப்புச் செய்தியாக, ஏதாவது ஒரு வர்த்தக நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்வு தான் இருக்கும்! இவைகளை மட்டும் அவர் செய்து கொண்டிருந்தால், அவரை மன்னித்து விடலாம்.
அவரது பத்திரிகையில் புலிகள் அல்லாத அனைவரையும் ‘துரோகிகள்’ என வரிக்கு வரி வர்ணிப்பதில் லோகேந்திரலிங்கம் மேற்கொள்ளும் அதீத கரிசனை தான் சீரணிக்க முடியாத ஒன்றாகும். ‘நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன’ என்பது போல, லோகேந்திரலிங்கத்துக்கு, டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன், வரதராஜப்பெருமாள், ஆனந்தசங்கரி, கருணாநிதி, ஜெயலலிதா, சோனியாகாந்தி என எல்லோரும் ‘துரோகிகள்’ தான். புலிகளின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் நாலு கால்களில் நின்று வாலை ஆட்டாத நாளில்லை எனலாம்.

இப்படியான ஒருவரின் பத்திரிகைக் காரியாலயத்தை கனடிய புலிக் காடையர்கள் தாக்குகிறாhகள் என்றால், அது கொள்கை சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கு முடியாது. இந்தத் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னரும் கூட ஒரு தடவை, கனடிய உதயன் பத்திரிகையை தமிழ் வர்த்தக நிறுவனங்களில் விநியோகத்துக்கு வைக்கக்கூடாது என புலிகள் அச்சுறுத்தியுள்ளனர். இவற்றுக்கான காரணங்கள் உதயன் பத்திரிகை புலிகளுக்கு எதிரான ஒரு உண்மையான நடுநிலைமையான பத்திரிகையாக மாறிவிட்டது என்பதனால் அல்ல.

உண்மையென்னவென்றால், புலிகளை நம்பியும், அவர்களது தயவிலும் தமது வியாபாரங்களை கனடாவில் நடாத்தி வந்த சில தமிழ் வர்த்தகக் கில்லாடிகள், புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமது பிழைப்பைத் தக்க வைத்துக் கொள்ள, இலங்கை அரசின் தயவை நாடத் தொடங்கினர். அவர்களுக்கு தேவை யாருடைய கையைக் காலைப் பிடித்தென்றாலும் பணம் சம்பாதிப்பது தான். அவர்களில் சிலா அண்மையில் இலங்கைக்குச் சென்று, வடக்கு கிழக்குப் பகுதிகளில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்ததுடன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து, தமது முயற்சிகளுக்கு அங்கீகாரத்தையும் பெற்று வந்துள்ளனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத புலிகளின் இன்னொரு கோஷ்டி, தமது வழமையான பாணியில் அவர்களைத் ‘துரோகிகள்’ என முத்திரை குத்தி வசைபாட ஆரம்பித்துள்ளது. இந்தத் தாக்குதலில், ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வதில்’ சமர்த்தரான லோகேந்திரலிங்கமும், இலங்கை சென்று வந்த கோஷ்டியுடன் இணைந்து நின்றதால் வந்த வில்லங்கமே, அவரது உதயன் பத்திரிகை மீதான தாக்குதலாகும்.

எது எப்படியிருப்பினும், உதயன் பத்திரிகை கடந்த காலங்களில் ஜனநாயகத்துக்கு விரோதமாக, பாசிச புலிகளின் செயல்பாடுகளை ஆதரித்திருந்த போதிலும் கூட, புலிகளுக்கு எதிரான அத்தனை பேரையும் ‘துரோகிகள்’ என வர்ணித்து வக்கணை செய்து வந்திருந்த போதிலும் கூட, தற்பொழுது புலி ரவுடிகளால் அப்பத்திரிகைக் காரியாலயம் தாக்கப்பட்டதை சகலரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஏனெனில் லோகேந்திரலிங்கம் கடந்த காலத்தில் நடந்தது போல, நாமும் ஜனநாயக மறுப்பில் ஈடுபடாமல் இருப்பது நமது கடமையாகும். லோகேந்திரலிங்கம் இனிமேலாவது தன்னைத் திருத்திக் கொள்வது என்பது அவர் சார்ந்த விடயமாகும்.
http://www.thenee.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக